இன்றும் நாளையும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்.. போக்குவரத்து, வங்கி, காப்பீட்டுத் துறை பணிகள் பாதிப்பு
அனைத்துத் தொழிற்சங்கங்களும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்துள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசின் கொள்கைகள் தொழிலாளர், விவசாயிகளுக்கு எதிராகவும், நாட்டு நலனுக்கு எதிராகவும் உள்ளதாகக் கூறித் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது உள்ளிட்ட அரசின் கொள்கைகளைக் கண்டித்து இன்றும் நாளையும் பொது வேலைநிறுத்தத்துக்கு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் போக்குவரத்து, வங்கி, காப்பீடு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அமைப்புச் சாராத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரு நாட்களும் மின்வழங்கலை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கும், மின் வழங்கல் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகள், பாதுகாப்பு, ரயில்வே உள்ளிட்ட இன்றியமையாச் சேவைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், அவற்றை வலுப்படுத்தக் கோரியும் அனைத்திந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பணப் பரிமாற்றம், காசோலை பணமாதல் உள்ளிட்ட வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் ரயில்வே ஊழியர்களும், பாதுகாப்புத் துறை ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவேலைநிறுத்தத்தின் முதல் நாளான இன்று கேரளத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களின் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுப் பேருந்துகள், வாடகை வாகனங்கள், தனியார் வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தத்துக்கு அரசு ஆதரவளிக்கவில்லை என்றபோதும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
கொல்கத்தா ஜாதவ்பூர் ரயில் நிலையத்தில் திரண்ட இடதுசாரித் தொழிற்சங்கங்கத்தினர் தண்டவாளத்தில் இறங்கி ரயில்களை மறித்தனர். இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கன்னாட் பிளேசில் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. வங்கிகளின் வெளியே ஊழியர்களின் கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்திலும் பேருந்துகள், வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
பெங்களூரில் வேலைநிறுத்தத்தால் பேருந்துகள், வாடகை வாகனங்கள் ஓடவில்லை. இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் சிவாஜிநகர் சந்தைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
Comments