இன்றும், நாளையும் நாடு தழுவிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்.. குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அறிவித்த 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது. பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், அலுவலக பணிக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றும், நாளையும் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. 2 நாள் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
பந்த் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை நேர பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்டனர்.
பாரிமுனை, சென்ட்ரல், அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பேருந்து நிலையத்தில் பெருமளவில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். ஒரு சில இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், அதிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Comments