ஊதாரி காதலனால் கல்லூரி மாணவி டிஜிட்டல் களவாணி... ரூ 12 லட்சத்தை திருடி கம்பி எண்ணுகிறார்
சென்னையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரியின் செல்போனிலிருந்து கூகுள் பே, போன் பே மூலம் சிறுகச் சிறுக 12 லட்ச ரூபாயை திருடிய கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுடன் ஊர் ஊராக இன்பச் சுற்றுலா சென்றபோது தங்கும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான அகஸ்டின் கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டை புதுப்பிப்பதற்கு பணம் எடுப்பதற்காக சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார்.
விருப்ப ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்துடன் சேர்த்து அவரது வங்கி கணக்கில் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பணம் இருந்த நிலையில், தற்போது 8 லட்ச ரூபாய் மட்டுமே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனது பணம் எங்கே என்று கேட்டு வங்கி அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். வங்கி கணக்கின் பரிவர்த்தனையை ஆய்வு செய்தபோது அகஸ்டினின் செல்போனில் உள்ள கூகுள் பே மற்றும்போன் பே மூலம் சிறுகச் சிறுக பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வங்கியில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு தெரியாமல் தன்னுடைய பணம் திருடுப் போயுள்ளது என்பதை அறிந்த அகஸ்டின் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசாரின் விசாரணையில் கடந்த சில மாதங்களாக அகஸ்டினின் செல்போனிலிருந்து கூகுள் பே, போன் பே மூலம் இரண்டு குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வங்கி கணக்கில் இருந்து எங்கிருந்தெல்லாம் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில் கோவா, கேரளா பாண்டிச்சேரி போன்ற இடங்களில் எடிஎம் மூலமும், ஆன்லைனிலும் பண பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.
அந்த வங்கிக் கணக்குக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை வைத்து அதன் நெட்வொர்க் சிக்னலை பின்தொடர்ந்த போலீசார், சம்பந்தப்பட்ட எண்ணிற்குரியவர் சதீஷ்குமார் என்பதையும் அவர் பாண்டிச்சேரியில் இருப்பதையும் கண்டுபிடித்தனர் .
உடனடியாக தனிப்படை போலீசார் பாண்டிச்சேரி விரைந்தனர். சதீஷ்குமார் தங்கி இருந்த தனியார் சொகுசு விடுதி அறைக்குள் அதிரடியாக நுழைந்தனர் போலீசார்.
அந்த அறையில் சதீஷ்குமாருடன், ஒரு இளம்பெண்ணும் இருந்துள்ளார். இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது உடனிருந்த இளம் பெண், அகஸ்டின் வீட்டில் 15 வருடங்களாக பணியாளராக வேலை பார்த்து வரும் வளர்மதி என்பவரது 19 வயதான மகள் சுமித்ரா என்பதும், இவர் மூலமாகத்தான் அகஸ்டின் வங்கிகணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதும் தெரியவந்தது.
தனக்கு குழந்தைகள் இல்லாததால் அகஸ்டின் வளர்மதியின் மகள் சுமித்ராவை தனது மகள் போலவே பாவித்து அவர் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்துள்ளார்.
ஆண்ட்ராய்டு செல்போனின் முழு பயன்பாட்டை அறிந்திராத அகஸ்டின், தனது செல்போன் பாஸ்வேர்டு முதல் வங்கி விவரங்கள் வரை அனைத்தையும் சுமித்ராவுக்கு தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலை ராணிமேரிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் சுமித்ராவுக்கு கே.கே நகரை சேர்ந்த சதீஷ்குமாருடன் காதல் மலர்ந்துள்ளது.
அகஸ்டினின் மொபைலை எடுத்து அவருக்கு தெரியாமல கூகுள் பே, போன் பே அனைத்தையும் பதிவிறக்கம் அதிலிருந்து தனது காதலனின் இரண்டு வங்கி கணக்கிற்கு பணத்தை சிறுகச் சிறுக மாற்றி காதலனுக்கு பல்சர் பைக் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார்.
இதனை அகஸ்டின் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 12 லட்சம் ரூபாய் வரை பணத்தை காதலனின் வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார் சுமித்ரா என்கின்றனர் போலீசார்
லட்சக்கணக்கில் பணம் சேர்ந்ததும் காதலனுடன் கோவா, பெங்களூரு, மும்பை, எர்ணாகுளம், கோவை, பாண்டிச்சேரி என்று ஊர் ஊராக உல்லாசமாக சுற்றி ஓட்டலில் ரூம் போட்டு காதலை வளர்த்துள்ளனர்.
பணப் பரிவர்த்தனை செய்தால் வழக்கமாக வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தியும் அகஸ்டின் செல்போனிற்கு வராமல் இருந்ததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சுமித்ரா இந்த டிஜிட்டல் பணத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கல்லூரி மாணவி சுமித்ராவையும், ஊதாரி காதலன் சதீஷ்குமாரரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 புதிய செல்போன்கள், 90 ஆயிரம் ரூபாய் பணம், 2 1/2 சவரன் தங்க சங்கிலி மற்றும் உல்லாசமாக ஊர் சுற்றுவதற்காக திருட்டு பணத்தில் வாங்கிய பல்சர் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வேலைக்கார பெண்ணின் மகள் என்றும் பாராமல் தன் மகளாக பாசம் கொட்டி வளர்த்த பாவத்துக்கு, கண்ணை மறைத்த காதலால் களவாணியாகி கல்லூரி மாணவி காதலனுடன் சிறையில் கம்பி எண்ணி வருகின்றார்.
Comments