கோஸ்ட் ரைடரான டுகாட்டி பைக் ரேசர்.. எரிந்து பலியான சோகம்.. 290கிலோ மீட்டர் வேகத்தால் ரூ 45 லட்சம் புகை..!

0 4294

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை  அடுத்த   வாகைகுளம்  4 வழிச்சாலையில் 290 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று டிராக்டர் மீது  மோதிய பைக் இரண்டு துண்டாக உடைந்து   தீ பற்றி எரிந்ததில்  பைக்ரேசர்  சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். 

சாதாரண வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விபரீத வீக் எண்ட் பைக்ரேஸ் குறித்து பிரத்யேக வீடியோ காட்சிகளுடன் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னையில் அட்டகாசம் செய்த பைக்ரேசர்களுக்கு தலை நகர போலீஸ் காப்பு மாட்டிய நிலையில் , நெல்லை மாவட்டம் ரெட்டைமலை நான்கு வழிச்சாலையில் வார இறுதி நாட்களில் சட்டவிரோதமாக பைக் மற்றும் கார் ரேஸ் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்த ரேஸில் செல்வந்தர் வீட்டு வாரிசுகள் தங்கள் விலை உயர்ந்த பைக் மற்றும் கார்களுடன் பங்கேற்று தங்கள் அதி வேகத்தால் நான்கு வழி சாலையை பந்தயசாலையாக மாற்றி மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருவதோடு அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த உதயா என்ற 25 வயதான இளைஞர் , 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது உறவினரின் டுகாட்டி பைக்குடன் வீக் எண்ட் பைக் ரேசில் பங்கேற்றுள்ளார்.

வெளி நாட்டில் மாதம் 1 . 75 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைபார்த்து வந்த உதயாவுக்கு அதிவேகத்தில் பைக் ஓட்டுவது பிடிக்கும் என்பதால் வாகன போக்குவரத்து குறைந்த சனிக்கிழமை அதிகாலையில் தனது குழுவினருடன் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அதிவேகத்தில் பைக்கை இயக்கி உள்ளார். எப்போதும் 280 முதல் 290 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் டுகாட்டி மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.

அவரது பைக் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் அருகே 4 வழிச்சாலை பாலம் அருகே சென்றபோது இருட்டில் பின் பக்கம் டேஞ்சர் லைட் இன்றி மனல் ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின் பக்கத்தில் அதிவேகமாக மோதி உள்ளது.

மோதிய வேகத்தில் பைக் இரண்டு துண்டாக நொறுங்கி தீப்பற்றி எரிந்தது உடலில் தீபற்றிய நிலையில் தூக்கி வீரப்பட்ட உதயா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானதாக அவரது பைக்கிற்கு பின்னால் பி.எம்.டபிள்யூ காரில் சென்ற அவரது நண்பர்கள் நேரில் பார்த்ததாக காவல் ஆய்வாளர் காளியப்பன் தெரிவித்தார்.

மேலும் தீவிபத்தில் சிக்கிய உதயாவை காப்பாற்ற நண்பர்கள் போராடிக் கொண்டிருந்ததால் டிராக்டரை பிடிக்க முடியாமல் போனதாகவும் , விபத்துக்கு காரணம் பைக்ரேஸ் என்பதை மறைத்து சென்னைக்கு பழுது பார்ப்பதற்காக பைக்கை ரெயிலில் அனுப்பி வைக்க நெல்லை கொண்டு சென்றதாக போலீசாரிடம் உதயாவின் நண்பர்கள் மாற்றி தெரிவித்துள்ளதும் தற்போது தெரியவந்தது.

உதயா பயன்படுத்திய டுகாட்டி பைக்கை கடந்த காலங்களில் பிரத்யேகமாக டிரக்கில் வைத்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஏற்றி சென்றதும், அவர்கள் வீக் எண்டில் மின்னல் வேகத்தில் பைக்ரேஸ் செல்வதும் அவர்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நான்குநேரி போலீசார் இந்த விபத்துக்கு பின்னனியில் உள்ள பைக்ரேஸ் குறித்தும், பின் பக்கத்தில் டேஞ்சர் லைட் இல்லாமல் நெடுஞ்சாலையில் மணல் டிராக்டர் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஓட்டுநரை பிடிக்கவும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த டிராக்டர் மட்டுமல்ல இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் பெரும்பாலான லாரிகளிலும், சாலையில் வைக்கப்படும் தடுப்புகளிலும் பிரதிபலிப்பான் ஒட்டப்பட்டுள்ளதா ? என்பதை போக்குவரத்து போலீசார் சரிவர கவனித்து நடவடிக்கை மேற்கொள்வதில்லை.

இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் டுகாட்டி மட்டுமல்ல எந்த ஒரு இரு சக்கர வாகனமானாலும் அதிவேகமாக சென்றால் கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்ப்பட்டு இறுதியில் விபத்தில் சிக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments