2 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து வெளிநாட்டு விமானங்கள் சேவையை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது இந்தியா.!

0 2382

கொரோனாவால் முடக்கப்பட்ட சர்வதேச விமான சேவை இன்று முதல் இயல்பு நிலைக்குத் தொடங்கியுள்ளது. 40 நாடுகளின் விமான சேவைகள் அனுமதிக்கப்பட்ட போதும், சீனாவில் கொரோனா பரவி வருவதால் அந்நாட்டு விமானங்களுக்கு தடை நீடிக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டாண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலாத் துறை போன்றவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

எட்டு மாதங்கள் வரையில் நீடித்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்தது, பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் "வந்தே பாரத்" திட்டம் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையைத் தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டிருந்தபோதும், ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால், வெளிநாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 40 நாடுகளைச் சேர்ந்த 66 விமான நிறுவனங்களின் விமானங்கள் வாரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தடவை வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் விமானங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் வரத் தொடங்கியுள்ளன. ஏப்ரல் முதல் வாரத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் இந்தியாவில் இருந்து 27 வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்களும் சென்று வர உள்ளன.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து அதிகாலை முதல் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உக்ரைன் போர் காரணமாக பெட்ரோலியப் பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச விமானக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments