மே.வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு.. விசாரணையைத் தொடக்கியது சிபிஐ..!
டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் குழு, 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையைத் தொடக்கியுள்ளது.
பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹட் என்னும் ஊரில் இரு பிரிவினரிடையே மோதலில் குடிசை வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மாநிலக் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்த இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு வாரங்களில் நிலை அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தியதை அடுத்து ஐந்து பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிந்தது. டெல்லியில் இருந்து மத்தியத் தடய அறிவியல் ஆய்வக வல்லுநர்கள் உட்பட 15 பேர் கொண்ட சிபிஐ குழு, டிஐஜி நிலையிலான அதிகாரியின் தலைமையில் மேற்கு வங்கத்துக்கு வந்தனர்.
ராம்பூர்ஹட்டில் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்ட இந்தக் குழுவினர் தடயங்களைச் சேகரித்தனர். முன்னதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் வழக்கு விவரங்கள், சேகரித்த தடயங்கள் ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Comments