ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்களுடன், சுமார் ரூ.1,600 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு - ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்களுக்கு இடையே ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அந்நாட்டின் தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் தொழில் முதலீட்டாளர்களையும், இந்திய தொழிலதிபர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து காட்சித் தொகுப்புகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
இதனை அடுத்து, தமிழ்நாட்டில் ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள், தொழில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் என்றாலே உழைப்பு மற்றும் விடா முயற்சி என்றும், வளைகுடா நாடுகளின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார். அமீரக தொழிலதிபர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல் துறையில், தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக கூறினார்.
ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு தமிழ்நாடு முன்னேறி வருவதாகவும், உலகளவில் பொருளாதார மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் மிக முக்கிய குறிக்கோள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Comments