ரத்தம் ரணம் ரவுத்ரம் ரசிகர்கள் ரகளை..! துப்பாக்கிலாம் கொண்டு வர்ராங்கப்பா..!
விஜயவாடாவில் உள்ள திரையரங்கு ஒன்றில் தொழில் நுட்பகோளாரால் டிரிபிள் ஆர் படம் பாதியில் நின்று போனதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
பாகுபலிக்கு பின்னர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரமாண்ட படைப்பான ரத்தம் ரணம் ரவுத்ரம் டிரிபிள் ஆர் படம் உலகமெங்கும் வெளியானது.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் டிரிபிள் ஆர் படம் திரையிட்ட திரையரங்குகள் ஆந்திராவில் அதகளப்பட்டது.
டிரிபிள் ஆர் படம் 5 மொழிகளில் வெளியிடப்பட்டாலும் தெலுங்கு ரசிகர்களின் உற்சாகத்தால் அங்குள்ள திரையரங்குகள் அல்லோகலப்பட்டது.
விஜயவாடா நகரில் உள்ள அன்னபூர்ணா திரையரங்கில் டிரிபிள் ஆர் படம் திரையிடப்பட்ட நிலையில் , தொழில் நுட்ப கோளாரால் பாதியில் படம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.
போலீசார் வரவழைக்கபட்டு சிறப்பு கவனிப்போடு ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை அனுப்பி வைத்தனர்.
அதே போல கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிரிபிள் ஆர் திரைப்படத்தை காண கையில் துப்பாக்கியுடன் வந்த ரசிகர் ஒருவர் திரைக்கு முன்னால் நின்று போஸ் கொடுத்து கெத்து காட்டினார்.
இதையடுத்து பீதியடைந்த ரசிகர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் துப்பாக்கியுடன் நின்ற ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.
விசுவஹிந்து பரிசத் அமைப்பை சேர்ந்த அவர் தனது பாதுகாப்புக்கு என்று உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், அதனை பொது இடத்தில் மற்றவர்களை அச்சுருத்தும் வகையில் கையில் தூக்கிப்பிடித்ததால் அவரது துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
மொத்தத்தில் ரத்தம் ரணம் ரவுத்ரம் படத்தின் வெளியீட்டால் ரசிகர்கள் செய்த ராவடி மற்றும் ரகளையால், சில திரையரங்கு உரிமையாளர்கள் திக் திக் மன நிலையிலேயே காணப்பட்டனர்.
Comments