பன்னாட்டு கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்தார் முதலமைச்சர்
துபாயில் நடைபெற்று வரும் பன்னாட்டு கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற 31ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கை பார்வையிட்ட முதலமைச்சர், தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம் போன்ற துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படுகின்றன.
மேலும், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள், அதன் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரங்கில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Comments