யோவ்... வைய்யா போன.. நிலத்தில் மணல் அள்ள பெர்மிஷன் கொடுத்தாச்சி...! ஆப்பில் ஏறி அமர்ந்த தாசில்தார்
மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தவரிடம், மணல் அள்ள முதலமைச்சரே அனுமதி வழங்கி விட்டதாக கூறி அடாவடியாக பேசிய தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தொப்பம்பட்டி கிராம பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் கிராவல் மண் அள்ள அரசு அனுமதி பெற்றுள்ள தனிநபர் ஒருவர், பகல் நேரத்தில் அனுமதி பெற்றுள்ள பட்டா இடத்திலும், இரவில் அரசுக்கு சொந்தமான இடத்திலும் என திருட்டுத்தனமாக கிராவல் மணல் அள்ளி கடத்துவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வியாழக்கிழமை இரவு தொப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர், அரசுக்கு சொந்தமான இடத்தில், திருட்டு மணல் அள்ளி பெரிய, பெரிய லாரிகளில் கடத்திச் செல்வதாக, தொப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பெரியண்ணன் என்பவரை தொடர்பு கொண்டு முதலில் பேசியிருக்கிறார். அவர், செல்போனை சுவிட்ச் ஆப் செய்த நிலையில், அடுத்ததாக, மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழார் என்பவரை தொடர்பு கொண்டு புகார் செய்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்த வட்டாட்சியர் சேக்கிழார், பர்மிஷன் வாங்கி விட்டு தான் மணல் எடுப்பதாகவும், மேலிடத்து உத்தரவு என்றும், திருட்டு மணல் அள்ளுவதாக புகார் தெரிவித்த போது முதல் அமைச்சரே அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனை தடுக்க பொதுமக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லையெனவும், கூறிய தாசில்தார் சேக்கிழார், நீ சிவனேனு உட்கார் என்றும் மதுபோதையில் பேசியதாக ஆடியோ ஒன்று வைரலானது.
வட்டாட்சியர் சேக்கிழாரின் அடாவடி பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் கொட்டப்பட்டியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்கடேசன் என்பவர் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் உள்ளிட்டோருக்கு இந்த குரல் பதிவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி புகார் அளித்தார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவே மணப்பாறை துணை வட்டாட்சியர் வெள்ளைச்சாமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மணல் அள்ள தடைவிதித்ததாக கூறப்படுகின்றது.
எகத்தாளமாக பேசிய தாசில்தார் சேக்கிழார், தான் மது அருந்தவில்லை பணிச்சுமையால் அப்படி பேசிவிட்டதாக தெரிவித்தார். மேலும் கலெக்டர் தன்னை, நத்தம் நிலஎடுப்பு தனி வட்டாச்சியராக மாற்றி உத்தரவிட்டுள்ளதாக சேக்கிழார் தெரிவித்தார்.
Comments