பிறந்த நேரம் சரியில்லை.. குழந்தையைக் கொன்ற கொடூரத் தாய்..! ஜோசியரால் வந்த சோதனை!

0 3156

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பிறந்த நேரம் சரியில்லை என ஜோசியர் சொன்னதைக் கேட்டு, 4 மாத ஆண் குழந்தையை ஆற்றில் வீசிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கொடூரத் தாயை போலீசார் கைது செய்தனர். குடும்பத்தில் நடந்த பிரச்சனைக்கு குழந்தை தான் காரணம் என நினைத்து தாய் அரங்கேற்றிய கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ராஜாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகேஷ்வரன் - லதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், நான்கு மாதத்திற்கு முன் இரண்டாவதாக மற்றொரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த குழந்தைக்கு கோகுல் என பெயரிட்டு வளர்த்து வந்திருக்கின்றனர். 2 நாட்களுக்கு முன் கழிவறைக்கு சென்றுவிட்டு வரும் போது வீட்டில் இருந்த குழந்தை கோகுலை காணவில்லை என லதா கூறவே, குடும்பத்தினரும், உறவினர்களும் சேர்ந்து தேடியிருக்கின்றனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் போலீசாருக்கு புகாரளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஊர் முழுக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பொருந்தலாறு ஆற்றங்கரை ஓரத்தில் செடி, கொடி நிரம்பிய இடத்தில் குழந்தை கோகுல் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். பிரேத பரிசோதனையில், குழந்தை நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது தெரியவந்த நிலையில், போலீசார் விசாரணையை தீவிரமாக முன்னெடுத்தனர்.

முதலில் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை துவங்கிய போலீசார், துருவி, துருவி கேள்வி கேட்டனர். போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய குழந்தையின் தாய் லதா, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர், தொடர் விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மேலும், ஜோசியர் சொன்னதைக் கேட்டு இந்த கொடூரத்தை அரங்கேற்றியதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்தது போலீசாரை திடுக்கிட செய்தது. இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்து லதாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்சனை உருவாகி சண்டையும் சச்சரவுமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்தோடு, குழந்தை கோகுலுக்கும் அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் போலீசாரிடம் கூறியுள்ள லதா, அதற்கான சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இதனால், என்ன செய்வது என தெரியாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும், பின்னர் தோஷம் இருக்குமோ என நினைத்து தமக்கு தெரிந்த ஜோசியரை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.

குழந்தை பிறந்த நேரம், நட்சத்திரத்தை வைத்து ஜோசியம் பார்த்த போது, குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என ஜோசியர் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, குடும்பத்தில் எதார்த்தமாக ஏற்படும் பிரச்சனைக்கு குழந்தை பிறந்தநேரம் சரியில்லாதது தான் காரணம் என மூடநம்பிக்கையால் முழுசாக நம்பிய லதா பச்சிளங்குழந்தையை கொலை செய்ய துணிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை சாதகமாக்கிக் கொண்ட லதா, குழந்தையை கொண்டு சென்று அருகிலுள்ள பொருந்தலாறு ஆற்றில் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. தண்ணீருக்குள் மூழ்கிய குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

பின்னர், போலீசாருக்கு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என நினைத்து, குழந்தை மாயமாகிவிட்டதாக தாமே உறவினர்களிடம் சொல்லி போலீசில் புகாரளித்ததாக தனது நாடகத்தையும் லதா ஒப்புக் கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, லதாவை கைது செய்த போலீசார் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments