முதலமைச்சரான பிறகு முதன்முறையாக தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்
4 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றார்.
துபாய் செல்வதற்காக பிற்பகல் 3 மணியளவில் தனது வீட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்றார். விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாலை 4 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் முதலமைச்சர் துபாய் புறப்பட்டு சென்றார்.
முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை வழிகாட்டு குழு தலைவர் பூஜா குல்கர்னி ஆகியோரும், முதலமைச்சரின் தனி செயலாளர்கள் உதயசந்திரன், அனு ஜார்ஜ், உமாநாத் ஆகியோரும் சென்றுள்ளனர்.
இரவு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் முதலமைச்சர், நாளை காலை 10 மணிக்கு சர்வதேச பொருளாதார அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ள துபாய் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு செல்ல இருப்பதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, போன்ற முக்கிய துறைகளில் உள்ள சிறப்புகள் பற்றி விரிவாக உலக நாட்டு பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்பட உள்ளன.
தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, முக்கிய துறைகளின் அமைச்சர்கள்,தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அபுதாபியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் வருகிற 28-ந்தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதாக அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments