ரூ.30 ஆயிரம் பேரம்.. எஸ்கேப்பான டி.ஆர்.. அப்செட்டான ஆர்.ஐ.. போதையில் பாய்ந்த கார்.!

0 4795

சென்னை தேனாம்பேட்டையில்  நடிகர் டி.ராஜேந்தர் பயணித்த  கார் மோதியதில் சாலையில் தவழ்ந்துவந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கியவரின் குடும்பத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் தருவதாக பேரம் பேசிய டி.ஆர் வாக்கு மாறியதால் வழக்கு பாய்ந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் முனுசாமி என்கிற கபாலி காவலாளியான இவருக்கு காலில் அடிபட்டதால் நடக்க இயலாமல் தவழ்ந்து சென்று வந்ததாக கூறப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் வாகனங்கள் வருவதை பார்த்த அவர் நிதானமான தவழ்ந்து சென்றுள்ளார்.

அப்போது நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் இன்னோவா காரில் அந்தவழியாக சென்றதாக கூறப்படுகின்றது . அந்த காரை அவரது ஓட்டுனர் செல்வம் என்பவர் ஓட்டி ச்சென்றுள்ளார். கார் இளங்கோ சாலை - போயஸ் தோட்ட பிரதான சாலை சந்திப்பில் திரும்பியபோது, சாலையில் தவழ்ந்து வந்த கபாலி மீது மோதி ஏறி இறங்கியுள்ளது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய காரை விரட்டிச்சென்று தடுத்து நிறுத்த முயன்ற போது, காரில் இருந்து இயக்குனர் டி ராஜேந்தர் இறங்கி வந்து 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து காயமடைந்த கபாலியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, அங்கு வந்த போக்குவரத்து போலீசாரிடம் காயமடைந்த கபாலிக்கு 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

தனது பேத்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்குச் சென்று விட்டு தனது மகளுடன் வந்ததாக அவர் கூறியதால் போலீசாரும் அவரது காரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

மறுநாள் சனிக்கிழமை அன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கபாலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பணம் கொடுப்பதாக வாக்கு கொடுத்த டி.ராஜேந்தர் செல்போனை எடுக்க வில்லை என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து பாண்டிபஜார் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டி ராஜேந்தரின் காரை விபத்தின் போது ஓட்டிய ஓட்டுநர் செல்வத்தை செவ்வாய்கிழமை கைது செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும் தங்களது செல்போன் அழைப்பை எடுக்காமல் அலட்சியம் செய்த டி.ராஜேந்தரின் கார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சியை அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து கைப்பற்றிய போலீசார் அதனை வெளியிட்டதோடு, சிலம்பரசனுக்கு சொந்தமான அந்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசாரை சமாதனம் செய்யும் வகையில் டி.ஆர் தரப்பினர் நடந்து கொண்டுள்ளனர். இதையடுத்து தாமதமாக ஓட்டுநர் செல்வத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போக்குவரத்து போலீசார் ஓட்டுனர் குடிபோதையில் இல்லை என்பதை காரணம் காட்டி அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 304ஏ சட்ட பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

கபாலி குடிபோதையில் இருந்ததால் நடக்க இயலாமல் சாலையில் அமர்ந்து இருந்ததாக போக்குவரத்து போலீசாரும், காலில் அடிபட்டு இருந்ததால் நடக்க முடியாமல் தவழ்ந்து சென்றதாக அவரது உறவினர்களும் தெரிவித்து இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments