2 ஆண்டுகளுக்கு பின் நீக்கப்படுகிறது கொரோனா கட்டுப்பாடு ...!

0 2511

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில்,கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில்  ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இனிமேலும் நாடு முழுக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழான நோய் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டாமென முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வருகிற 31 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இதற்கு மேல் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.  இனிமேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உத்தரவுகளை மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டாமென கூறப்பட்டுள்ளது. 

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 -இன் படி கொரோனா தொற்றை பரவலை தடுப்பது குறித்த உத்தரவுகள், வழிகாட்டுதல்களை பிறப்பிப்பதை கைவிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி மற்றும் அது சார்ந்த பணிகளில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 7 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக குறைந்து வருவதாகவும், கடந்த ஓராண்டாக பெருந்தொற்று மேலாண்மையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனை, கண்காணிப்பு, தொற்று பரவலை கண்டறிவது,சிகிச்சை, தடுப்பூசி, மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் மத்தியிலும் மேம்பட்ட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் மார்ச் 31-க்குள் முடித்துக் கொள்ளலாம் என்றும், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் மற்றும் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத்துறையின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments