சபாரியில் வலம் வந்த டுபாக்கூர் வசூல் போலீஸை மொத்தி எடுத்த பப்ளிக்... முகம் பனியாரம் போல வீங்கியது
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே போலீஸ் எனக்கூறி கடை கடையாக மாமூல் வசூலித்த இருவரை மடக்கி பிடித்த வியாபாரிகள், அவர்களை அடித்து உதைத்து சிறப்பாக கவனித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சபாரி உடையுடன் சுற்றியவர்கள் மொத்தி எடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பணியாரம் போல உப்பிப்போன முகத்துடன் கிழிந்த சபாரியுடன் அடி தாங்கிய இடி அமீன் போல போஸ் தரும் இவர்கள் தான் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வாங்கியதால் தாக்குதலுக்குள்ளான போலி போலீசார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள தும்பிபாடி, பன்னப்பட்டி ஆகிய ஊர்களுக்கு சபாரி உடையில் சென்ற இருவர் தங்களை போலீஸ் எனக்கூறி சுற்றி உள்ளனர்.
பொது இடங்களில் மது குடிப்பவர்கள், சிக்கன் கடை வைத்திருப்பவர்கள், உணவகங்கள் என ஒவ்வொரு இடமாக சென்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அந்த இருவரும் தங்களை போலீஸ் எனக்கூறி மிரட்டி மாமுல் கேட்டு கறார் வசூலில் ஈடுபட்டனர். சிலர் அவருக்கு பயந்து 2000 ரூபாய் வரை மாமூல் கொடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அங்குள்ள மளிகை கடைக்கு சென்று கடையில் இருந்த பெண்ணிடம், புகையிலை பொருட்கள் இருக்கின்றதா ? எனக் கேட்டதோடு, 200 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
அந்தப்பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவிக்க, மளிகை கடையில் வந்து மாமூல் கேட்குறாங்கன்னா நிச்சயம் அவர்கள் போலீசாக இருக்க முடியாது என்று நினைத்து அந்த சபாரி ஆபீசர்களை மடக்கி அடையஆள அட்டையை காண்பிக்க சொல்லி கேட்டுள்ளார்.
அடுத்த நொடியே அவரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பியதால், சபாரி உடையில் மாமூல் வசூலித்தது போலி போலீஸ் என்பதை அறிந்து அங்கிருந்த வியாபாரிகள் விரட்ட தொடங்கி உள்ளனர்.
அருகில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சிக்கிய சபாரி திருடர்களை மடக்கிப்பிடித்து கொடுத்த அடியில் இருவரது சபாரியும் கிழிந்து முகமெல்லாம் பணியாரம் போல வீங்கியது
ஒவ்வொரு வியாபாரியிடமும் 500 ரூபாய் வரை பணம் பறித்துச்சென்றதால் ஆத்திரம் அடைந்தவர்கள் சபாரி திருடர்களை செம்மையாக கவனித்தனர். அடி தாங்க இயலாமல் விட்டு விடும்படி கையெடுத்து கும்பிட்டனர்.
இறுதியில் சபாரி திருடர்கள் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் சாமி நாயக்கன்பட்டியை சேர்ந்த மணி மற்றும் சின்னப்பட்டயை சேர்ந்த குண்டு குமார் என்பதும் தனியார் நிறுவன செக்கியூரிட்டிகள் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் இருவரும் உணவு பாதுகாப்பு அதிகாரி என்றும், போலீஸ் என்றும் இடத்திற்கு தகுந்தார்போல் பொய் பேசி சுமார் 50ஆயிரத்துக்கும் மேல் வசூல் செய்ததும், பல முறை பேருந்துகளில் போலீஸ் என்று போலியான அடையாள அட்டையுடன் பயணித்து சிக்கிக் கொண்டதும் அம்பலமானது. இவர்கள் இருவரும் இது போல வேறு எந்த ஊர்களிலெல்லாம் கைவரிசைகாட்டி உள்ளனர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments