சிறையில் கைதிகள் சிலருக்கு செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் விநியோகம் செய்த காவலர்கள் பணி நீக்கம்
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் விநியோகம் செய்ததாக காவலர்கள் இருவரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் கஞ்சா, குட்கா, புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் செல்போன் பயன்பாடும் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து சிறை வளாகம் முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், தண்டனை கைதிகள் ஏழு பேர் போதை வஸ்துகளையும் செல்போன்களையும் பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு உதவி செய்ததாக சிறைத்துறை காவலர்களான விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகியோர் சில நாட்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில் கடந்த 5 மாதங்களில் 113 முறை சிறைக்கைதிகள் செல்போன் பேசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
Comments