இளம்பெண் பாலியல் வன்முறை வழக்கு : சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய ஹரிகரன் என்ற நபர் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அதனைக் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மேலும் தனது நண்பர்களுக்கும் அந்த வீடியோவை ஹரிகரன் அனுப்பியதால் அவர்களும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலியல் வன்முறை புகார் வந்த உடன், 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மீதியுள்ள 4 பேர் சிறார் நீதிமன்றத்தின் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக, தற்போது வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை விரைவில் பெற்றுத்தரப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.
Comments