பேய் ஓட்டுவதாக கூறி மூக்கில் ஊதுவத்தி காட்டி பெண் மானபங்கம்..!
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பேய் விரட்டுவதாக கூறி உறவினர்களை வெளியே அனுப்பி விட்டு, ஊதிவத்தியைக் காண்பித்து பெண்ணை மயங்க வைத்து மானபங்கப்படுத்தியதாக மாந்திரீகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திட்டக்குடியை சேர்ந்த திருமணமான 22 வயது பெண் ஒருவருக்கு கடந்த இரு தினங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளார். அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதித்த நிலையில் உடல்நிலை சரியாகாததால், அந்தப்பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு பேய் பிடித்து இருப்பதாக கருதி உள்ளார். உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெண்ணாடத்தில் பேய் ஓட்டுவதற்காக மனைவியை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பேய் ஓட்டும் மாந்த்ரீகராக அமர்ந்திருந்த 54 வயதான அப்துல்கனி என்பவர், அந்தப்பெண்ணுடன் சென்ற கணவர், சித்தப்பா மற்றும் உறவுக்கார பெண் ஆகியோருக்கு கருப்பு கயிற்றை கையில் கட்டி விட்டு வெளியில் சென்று அமர்ந்து இருக்க கூறி உள்ளார்.
வெளியில் சென்ற பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு எப்படி பேய் விரட்டுகிறார் என்று ஜன்னல் வழியாக உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறப்பட்ட பெண்ணை தலையை பிடித்து இழுத்து மடியில் போட்ட அப்துல் கனி சில ஊதுபத்திகளை கொளுத்தி அதன் புகையை அந்தப் பெண்ணின் மூக்கிற்கு அருகில் கொண்டு நுகரச் செய்துள்ளார் அடுத்த நொடி அந்தப்பெண் மயக்க நிலைக்கு சென்றதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து அந்தப்பெண்ணிடம் அப்துல்கனி பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகின்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் உடனடியாக ஓடிச்சென்று அந்த மாந்த்ரீகரை தள்ளிவிட்டு, அவரிடம் இருந்து தனது மனைவியை காப்பாற்றி காவல் நிலையம் அழைத்து வந்து புகார் அளித்துள்ளார்.
முதலில் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். பட்டியல் சமூக பெண்ணுக்கு எதிராக நடந்த கொடுமை மீது உள்ளூர் போலீசார் நடவடிக்கை மறுப்பதாக காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்ற நிலையில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட அப்துல் கனி மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அப்துல்கனியை பிடித்து சம்பவ இடத்தில் நடந்தது என்ன ? என்று விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தான். போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரித்தனர். அதற்கு அந்தப்பெண் அவர் தனது காலை பிடித்து இழுத்தது வரை மட்டுமே நினைவிருப்பதாகவும் அதற்குள்ளாக தான் மயங்கி விட்டதாகவும், போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்துல்கனியை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இல்லாத பேயை விரட்டுவதாக கூறி அப்பாவி பெண்ணின் வாழ்க்கையோடு மாந்த்ரீகர் விளையாட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments