ரூ.400 கோடிப்பே…..! ரசிகர்கள் சுட்ட வடை..! ரூ.100 கோடி நட்டமாம்..! ரூ.50 கோடியை திருப்பி கொடுத்ததாக தகவல்

0 6852
ரூ.400 கோடிப்பே…..! ரசிகர்கள் சுட்ட வடை..! ரூ.100 கோடி நட்டமாம்..! ரூ.50 கோடியை திருப்பி கொடுத்ததாக தகவல்

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  5 மொழிகளில் வெளியான ராதேஷ்யாம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் படத்திற்காக தான் பெற்ற 100 கோடி ரூபாய் சம்பளத்தில் 50 கோடி ரூபாயை நடிகர் பிரபாஸ் திருப்பி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் இரு பாகங்களின் பிரமாண்ட வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட சூப்பர் ஹீரோவானார் தெலுங்கு நடிகர் பிரபாஸ்..!

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அவருக்கு புதிய மார்க்கெட் உருவானது . இதையடுத்து அதற்கு ஏற்றார் போல சம்பளத்தை உயர்த்திய பிரபாஸ், தன்னுடைய படங்களை 5 மொழிகளில் வெளியிடுவதை வழக்கமாக்கினார். பாகுபலிக்கு பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளியான சாஹூ திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் தோல்வியை தழுவியது

இந்த நிலையில் அண்மையில் பிரபாஸ் நடிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் டைட்டானிக் ஸ்டைலில் உருவான ராதேஸ்யாம் திரைப்படம் 5 மொழிகளில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த 11 ந்தேதி வெளியானது..! படம் வெளியான 10 நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக ரசிகர்கள் டுவிட்டரிலும், முகனூலிலும் பதிவிட்டு வந்தனர்.

பிரபாஸுடன் பூஜாஹெக்டே நாயகியாக நடித்திருந்த இந்த படத்திற்கு முதல் நாள் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் வரவேற்பு இல்லாமல் திரையரங்குகள் காற்றுவாங்க ஆரம்பித்தன. 5 மொழிகளிலும் கடந்த 11 நாட்களை கடந்த நிலையில் ராதேஸ்யாம் படம் சர்வதேச அளவில் இதுவரை 140 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபாஸின் ரசிகர்களை மட்டுமல்ல குடும்பத்து ரசிகர்களையும் ஈர்க்காததால் இந்த படம் தோல்வியை சந்தித்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்திற்காக பிராபாஸ் தான் பெற்ற 100 கோடி ரூபாய் சம்பளத்தில் 50 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்பி கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

படத்தின் பட்ஜெட்டில் பெருந்தொகையை சம்பளமாக பெரும் நாயகர்களின் படம் எதிர்பார்த்த வசூலை பெறாவிட்டால் தயாரிப்பாளர்கள் கடுமையான நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று சுட்டிக்காட்டும் தயாரிப்பாளர் ஒருவர், பெரும்பாலான பிரபல நடிகர்கள் தாங்கள் வாங்கிய சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுப்பது இல்லை என்றும் தமிழ் திரைஉலகில் ரஜினி, விஜய், அஜீத் ஆகியோர் தங்கள் படம் சறுக்கினால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்கும் விதமாக புதிய படங்களில் நடித்தும், தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை விட்டும் கொடுத்துள்ளனர் , அந்தவகையில் பிரபாஸ் தனது சம்பளத்தில் 50 சதவீதத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

உருப்படியான கதையை நம்பாமல் பிரமாண்டம் என்ற பெயரில் ஹீரோவுக்கு மாஸ் காட்சிகள் வைப்பதிலேயே கவனம் செலுத்தினால் , படம் பியூஸ் ஆகி தயாரிப்பாளர் லாஸ் ஆவார் என்பதற்கு தற்போது சறுக்கிய பிரபல நாயகர்களின் படங்களே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments