உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இன்று அவசரக் கூட்டம்
உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுச்சபையின் சிறப்புக்கூட்டம் இன்று மீண்டும் நடைபெறுகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து 28 வது நாளாக தாக்குதலை தொடுத்து வருகின்றன. அந்நாட்டின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளான ஹோஸ்டோமெல் மற்றும் இர்பின் ஆகியவற்றை ரஷ்ய துருப்புகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக ரஷ்ய துருப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தப் போர் காரணமாக உக்ரைனில் இருந்து 30 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உக்ரைன் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், 10,000 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால சிறப்பு அமர்வு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 22 உறுப்பு நாடுகள் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, ஐ.நா. சபையின் அவசரகால சிறப்பு கூட்டம் இன்று நடைபெறும் என்றும், மனிதாபிமான பின்விளைவுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் ஐ.நா.சபைத் தலைவர் அப்துல்லா ஷாகித் விடுத்துள்ள அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2ந் தேதி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், போரை உடனே நிறுத்த ரஷ்யாவை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Comments