மாணவியை கடத்தி திருப்பதியில் டீ விற்கவைத்த மன்மத ஆசிரியர் லீலைகள்..! வயதுக்கு மீறிய காதல் வீதியில் நிறுத்தும்..!
கோவையில் டியூசனுக்கு வந்த 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்ற கணக்கு வாத்தியார் ஒருவர், நாகர் கோவில் அருகே தலைமறைவாக இருந்த போது வீட்டு உரிமையாளர் மகளையும் காதல் வலையில் வீழ்த்தி கடத்திச்சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். படிக்கின்ற வயதில் காதலில் விழுந்ததால் திருப்பதியில் டீ விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுமி மற்றும் இளம் பெண்ணின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவன் தான் காதல் என்ற பெயரில் இரு மாணவிகளை கடத்தி பெரிய வேலைகளை பார்த்து போலீசில் சிக்கி இருக்கும் மன்மத வாத்தியார்..!
2019 ம் ஆண்டு ஆத்தூர் அடுத்த நடுவலூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த மணிமாறன், முதல் மனைவியை பிரிந்து 2 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவன். ஆத்தூரில் A to Z என்ற பெயரில் பணத்தை ரெட்டிப்பாக்கி தருவதாக நிதி நிறுவனம் நடத்தி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து ஒரு கட்டத்தில் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு 2 வது மனைவியை விட்டு விட்டு தலைமறைவாகி உள்ளான். இதனால் அவனை அரசு பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
இதையடுத்து கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடன ஆசிரியராக வேலைப்பார்பதாக கூறி, சரவணம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறிய மணிமாறன், கணக்கு பாடத்தில் திறமைசாலி என்று அக்கம் பக்கத்து வீட்டாரை நம்பவைத்துள்ளான்.
மணிமாறன் அளந்து விட்ட கதையை நம்பி அவனிடம் 3 மாணவிகளை அவர்களது பெற்றோர் டியூசனுக்கு சேர்த்துள்ளனர். அவர்களில் 11 ஆம் வகுப்பு படித்த 16 வயது மாணவியை தனது மன்மத பேச்சால் மயக்கி காதல் வலையில் வீழ்த்திய மணிமாறன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த சிறுமியை கடத்திச் கொண்டு தலைமறைவாகி விட்டான்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கணவன் மனைவி என்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தபோது, பள்ளி மாணவியை பார்ப்பதற்கு அவனது வீட்டுக்கு வந்து சென்ற வீட்டு உரிமையாளரின் மகளான 19 வயது கல்லூரி மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளான் மணிமாறன். ஒரு நாள் அங்கிருந்து இரு மாணவிகளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தலைமறைவாகி உள்ளான்.
இதற்கிடையே கோவை சரவணம்பட்டி போலீசார் மணிமாறனை தேடி சுசீந்திரம் சென்ற நிலையில் அவன் மேலும் ஒரு மாணவியை கடத்திச்சென்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மாணவிகளின் வாழ்க்கையோடு விளையாடிவரும் காமுக வாத்தியார் மணிமாறனை போஸ்டர் ஒட்டி தேடி வந்தனர். 8 மாதங்களாக தேடியும் சரவணம் பட்டி போலீசாரால் மாணவிகளுடன் தலைமறைவான மணிமாறனை பிடிக்க இயலவில்லை.
இந்த நிலையில் மணிமாறனால் அழைத்துச்செல்லப்பட்ட சுசீந்திரம் கல்லூரி மாணவி தனது தோழிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது காதலன் மணிமாறனை நம்பி வந்ததற்கு திருப்பதியில் டீ விற்றுவருவதாக கூறி கதறி உள்ளார். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல தன்னை பயன் படுத்திய மணிமாறன் தற்போது தன்னை சைக்கிளில் டீ கேனுடன் வீதி வீதியாக டீ விற்றுவர அனுப்பி கொடுமைப்படுத்துவதாக கதறி அழுதுஉள்ளார்.
அந்த தோழி மூலம் பெற்றோருக்கும் போலீசுக்கும் மணிமாறன் குறித்த தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற போலீசார், வேகாத வெயிலில் டீக்கேனுடன் நின்றிருந்த அந்த கல்லூரி மாணவியை மீட்டு, அவர் கொடுத்த தகவலின் பேரில் திருப்பதி மாருதி நகரில் மற்றோரு பகுதியில் டீ விற்றுக் கொண்டிருந்த பள்ளி மாணவியையும் , மணிமாறனையும் சுற்றிவளைத்தனர்.
மீட்கப்பட்ட இரு மாணவிகளும் பஞ்சம் பிழைக்க சென்றவர்கள் போல பரிதாபமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மன்மத ஆசிரியர் மணிமாறனை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை அழைத்து வந்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் வலையில் வீழ்த்த மாணவிகளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்து மயக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போல எத்தனை பேர் மணிமாறனிடம் ஏமாந்துள்ளனர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
படிக்கின்ற வயதில் காதல் என்னும் மாய வலையில் விழுந்தால் வாழ்க்கையை பறிகொடுத்து வீதியில் தவிக்கும் நிலை ஏற்பட்டும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு சான்று..!
Comments