ஜெயலலிதா மரண விசாரணையும்.. ஓ.பி.எஸ் பதிலும்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆணையத்தின் கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், 2வது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
ஜெயலலிதா இறப்பதற்கு முன் தாம் உள்பட மூன்று அமைச்சர்கள் சென்று அவரை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். செப்டம்பர் 21-ஆம் தேதி மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவில்தான் ஜெயலலிதாவை தான் கடைசியாக பார்த்ததாக நேற்று ஆணையத்தில்
ஓபிஎஸ் தெரிவித்திருந்திருந்தார்.
டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின் மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது தனக்கு தெரியாது என்றும், ஆனால் மாலை 05.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் என்றும், இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது தனக்கு தெரியும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்சனை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் கேள்வி எழுப்ப முயன்ற போது, மருத்துவம் சார்ந்த கேள்வியின் போது மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் என கூறி அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளதாகவும், சசிகலா மீது தனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் இருப்பதாகவும் கூறினார்.
சசிகலா என்று இதுவரை பொது வெளியில் பேசி வந்த ஓபிஎஸ், தற்பொழுது சின்னம்மா என்று குறிப்பட்டு பேசினார்.
ஆணையம் தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்துள்ளதாகவும், சசிகலாவை விசாரணைக்கு அழைக்க மாட்டார்கள் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
Comments