தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் பின் 48 மணி நேரத்தில் மியான்மர் நோக்கி அது செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 3 நாட்களுக்கு மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments