மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

0 2188
மேகதாது விவகாரம் - சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசுக்கு எதிரான தனித்தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், ஒரே நிலைப்பாட்டுடன் மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார்.

அதேபோல தமிழகத்திலும் என்ன கருத்துவேறுபாடு இருந்தாலும் அதனை விட்டுவிட்டு பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என கைகூப்பி கேட்பதாக தெரிவித்தார்.

கர்நாடகா அணை கட்ட முயற்சிக்கும் குறிப்பிட்ட இடத்தில் இயற்கையாக பொழியும் மழை தண்ணீரை, தமிழகம் பயன்படுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த குறிப்பிட்ட இடத்தில் தான் கர்நாடகா அணையை கட்டி அந்த தண்ணீரை தடுக்க முயற்சிப்பதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக காவிரி நீர் உள்ளது என்றதோடு, மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தனி தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

பின்னர், மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசையும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தும் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சியினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments