தோட்டத்து வீட்டில் தூக்கில் தொங்கிய மாணவி சடலம் : கொலை செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அனுராத்திகா என்ற அந்த மாணவி, 3ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். சனிக்கிழமை மாலை முதல் மாணவியைக் காணாமல் பெற்றோர் தேடி வந்த நிலையில், ஊருக்கு வெளியே தோட்டத்து வீட்டில் உடலில் காயங்களுடன் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவரை யாரோ அடித்துக் கொலை செய்திருக்கின்றனர் எனக் கூறி, மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments