மரியுபோல் நகரம் முற்றுகை... உருக்காலையில் தாக்குதல்.. ரஷ்யா மீது குற்றச்சாட்டு
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய உருக்காலை ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது.
உக்ரைனின் தென்கிழக்கில் அசோவ் கடற்கரையில் உள்ள மரியுபோல் மிக முதன்மையான துறைமுக நகராகும். இந்த நகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்ய ராணுவத்தினர் அங்கிருந்து மக்களை ரஷ்யப் பகுதிக்கு வெளியேற்றி வருவதாகவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை கிடைப்பதைத் தடுப்பதாகவும் நகரவை குற்றஞ்சாட்டியுள்ளது.
இங்குள்ள அசோவ்ஸ்டீல் ஆலை ஐரோப்பாவின் பெரிய உருக்காலைகளில் ஒன்றாகும். இந்த ஆலையின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய காட்சியை உக்ரைனிய நாடாளுமன்ற உறுப்பினர் லெசியா வாசிலெங்கோ வெளியிட்டுள்ளார்.
தாக்குதலில் அசோவ்ஸ்டீல் உருக்காலை பெரிதும் சேதமடைந்ததாகவும், அதனால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொருளாதாரப் பேரிழப்பும், சுற்றுச்சூழல் அழிவும் ஏற்பட்டுள்ளதாகவும் லெசியா வாசிலெங்கோ தெரிவித்துள்ளார்.
சனியன்று எட்டு வழித்தடங்களில் மக்களை வெளியேற்றும் பணி நடைபெற்றதாகவும், மரியுபோல் நகரில் இருந்து நாலாயிரத்துக்கு மேற்பட்டோர் சபோரிசியாவுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
மரியுபோல் மக்களை அழைத்துச் செல்ல அனுப்பப்பட்ட பேருந்துகளை நகருக்குள் செல்ல விடாமல் ரஷ்ய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரியுபோல் நகரில் 400 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளிக் கட்டடத்தின் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது மீண்டும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாகச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments