ராமஜெயம் கொலை சிறை கைதிகளிடம் துப்பு துலக்கும் போலீஸ்..! 5 தனிப்படை பர பர!
பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, சிறைக்கைதிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ந்தேதி நடைபயிற்சிக்குச் சென்ற போது மர்மக் கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
ராமஜெயத்தின் கைகால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த கொடூர கொலைச் சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில், கொலையாளிகளைக் கண்டறிய காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 கால கட்டத்தில் தமிழகத்தை அச்சுறுத்திய பவாரியா கொள்ளைக் கும்பலை பிடித்த ஜாங்கிட் தலைமையிலான தனிப்படையில் முக்கிய பங்கு பகித்தவர் ஜெயக்குமார். வட மாநில சிறைகளுக்குச் சென்று சாதுர்யமாகத் துப்பு துலக்கியதில் ஜெயக்குமார் பங்கு முக்கியமானது.
அந்த அடிப்படையிலேயே ராமஜெயம் கொலை வழக்கை துப்பறியும் புலனாய்வுக்குழு தலைமை அதிகாரியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முதல்கட்டமாக ராமஜெயம் கொலை தொடர்பாக தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்த கையோடு தனிப்படையினர் தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட சிறைகளில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பெரும்பாலான அரசியல் கொலைகளுக்கு சிறையில் தான் திட்டம் தீட்டப்படுகின்றது என்பதால், முதல் கட்டமாக பல்வேறு கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களில் தொடர்புடைய கூலிப்படையினரின் பெயர் விவரங்களை சேகரித்துள்ள தனிப்படையினர் அவர்களின் சரித்திர குற்றப்பதிவேடுகளை ஆய்வு செய்து சிறையில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, கடலூர், உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கூலிப்படையினரின் கடந்த கால கடத்தல் மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அந்தந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களின் கூட்டாளிகள் மூலமாக ராமஜெயம் வழக்கில் கொலையாளிகளை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
எஸ்.பி ஜெயகுமார் தலைமையில் 3 டி.எஸ்.பிக்கள், 5 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 45 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் சவாலான இந்த வழக்கில் துப்புதுலக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
Comments