பெற்றோரைப் பேணாத மகனுக்குச் சொத்துரிமை இல்லை - மும்பை உயர் நீதிமன்றம்
பெற்றோரைப் பேணாத மகன் அவர்கள் உயிருடன் உள்ள காலம் வரை அவர்களின் வீட்டில் உரிமை கோர முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக மனச்சோர்வால் கணவன் படுக்கையில் உள்ள நிலையில், தன்னை அவரது சட்டப்படியான காப்பாளராக அறிவிக்கக் கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 2 வீடுகள் சொந்தமாக இருந்தும், தங்கள் மகன் தந்தையைக் கவனிக்கவில்லை என்றும், தானே மருத்துவச் செலவைச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ளக் கோரி அவர்களின் மகன் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தந்தையை ஒருமுறையாவது மருத்துவரிடம் அழைத்துச் சென்றீர்களா? அவரது மருத்துவச் செலவை ஏற்றீர்களா? என மகனிடம் வினவினர்.
ஆவணங்களின்படி மருத்துவச் செலவைத் தாயே செய்து வந்ததும், ஒருமுறை கூட மகன் செலவை ஏற்கவில்லை என்பதும் தெரிவதாகக் கூறினர். தந்தையைப் பேணுவதில் அக்கறை இல்லாத மகனுக்கு அவரது வீடுகளில் எந்த உரிமையும் இல்லை எனக் கூறி இடையீட்டு மனுவை நிராகரித்தனர்.
Comments