காதல் மனைவிக்காக தண்டவாளத்தில் தலை கொடுத்த இளைஞர்.. 2 மணி நேரத்தில் உயிர் தியாகம்.!
சேலம் அருகே தந்தை இறந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவியை பிரிய மனமின்றி , 2 மணி நேரத்தில் கணவன் தண்டவளத்தில் தலைவைத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி அடுத்த தம்மநாயக்கண்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். டிப்ளமோ படித்துவிட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள இரு சக்கர வாகனம் விற்கும் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த ரவிக்குமார் மல்லூர் பகுதியை சேர்ந்த நண்பரின் தங்கை சரண்யா என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சரண்யாவிற்கு தேவையான சிகிச்சையை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று ரவிக்குமார் அளித்து வந்தாலும், ஒரு வருடத்திற்குமுன்பாக இறந்த தந்தையின் நினைவாகவே சரண்யா இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. வயிற்றுவலியால் கடுமையான மன உளைச்சலுடன் காணப்பட்ட மனைவியை ரவிக்குமார் சமாதானப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த சரண்யா தனது சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. தகவல் அறிந்து வீட்டுக்கு விரைந்து வந்த ரவிக்குமார் மனைவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார்.
கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்துடன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்ற ரவிக்குமார், நீ சென்ற இடத்திற்கே வந்து விடுகிறேன்.... என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
அவரை உறவினர்கள் சமாதானம் செய்த நிலையில் , தொடர்ந்து அழுதபடி இருந்துள்ளார் ரவிக்குமார் . சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் மனைவியின் சடலம் வைக்கப்பட்டதும், வீடு வரை சென்று வருகிறேன் என தெரிவித்துவிட்டு கொண்டலாம்பட்டிக்கு புறப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு செல்ல மனமின்றி தவித்த ரவிக்குமார் மனைவி உயிரிழந்த 2 மணி நேரத்திற்குள்ளாக இரவு 8 மணி அளவில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சேலம் -கரூர் ரயில் பாதையில் தண்டவாளத்தில் தலைவைத்து சரக்கு ரயிலில் தற்கொலை செய்து கொண்டார் . உடல் வேறு தலை வேறாக கிடந்த அவரது சடலத்தை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் அவரது மனைவியின் சடலம் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனைக்கு ரவிக்குமாரின் சடலத்தை அனுப்பி வைத்தனர்.
தந்தையின் மீதுள்ள பாசத்தால் உயிரைவிட்ட சரண்யா, மனைவி சரண்யாவை பிரிய மனமின்றி உயிர் தியாகம் செய்த ரவிக்குமார் ஆகிய இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபரீத முடிவால் உண்டான இருவரது சாவையும் ஏற்றுக்கொள்ள மனமின்றி தவித்த உறவினர்களோ, ரவிக்குமாரின் சடலத்தை தம்மநாயக்கன்பட்டிக்கும், சரண்யாவின் சடலத்தை மல்லூருக்கும் எடுத்துச் சென்று தனி தனியாக இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.
காதல் மனைவியை பிரிய மனம் இன்றி கணவன்ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து உயிர் விட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments