தமிழக பட்ஜெட் - வரவும் செலவும்..!

0 2269

தமிழ்நாடு அரசின் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 188 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டில் அரசுக்குப் பலவகைகளில் கிடைக்கும் வருவாய், பல துறைகளின் செலவுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

வணிக வரிகள் மூலம் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 765 கோடி ரூபாயும்,மாநில ஆயத்தீர்வைகள் மூலம் பத்தாயிரத்து 589 கோடி ரூபாயும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள் 16 ஆயிரத்து 322 கோடி ரூபாயும், மோட்டார் வாகனங்கள் மீதான வரி 7149 கோடி ரூபாயும் கிடைக்கும். இவற்றில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 800 கோடி ரூபாயும், சொந்த வரியல்லாத வருவாய் 15 ஆயிரத்து 537 கோடி ரூபாயும் ஆகும்.

மத்திய வரிகளில் தமிழ்நாட்டின் பங்கீடு 33 ஆயிரத்து 311 கோடி ரூபாய் ஆகும். சரக்கு சேவை வரி இழப்பீட்டுக்கான உதவி மானியம் 39 ஆயிரத்து 759 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்த வருவாய் வரவினங்கள் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 407 கோடி ரூபாய் ஆகும்.

தமிழ்வளர்ச்சித் துறைக்கு 83 கோடி ரூபாயும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு 7475 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு 10,285 கோடி ரூபாயும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 496 கோடி ரூபாயும், நீதி நிர்வாகத் துறைக்கு 1462 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மொத்தம் 13 ஆயிரத்து 176 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 7338 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு 1315 கோடி ரூபாயும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு 849 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 896 கோடி ரூபாயும், உயர்கல்வித்துறைக்கு 5,669 கோடி ரூபாயும், நான் முதல்வன் திட்டத்துக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293 கோடி ரூபாயும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17 ஆயிரத்து 901 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 5922 கோடி ரூபாயும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு 4281 கோடி ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1230 கோடி ரூபாயும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு 838 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறைக்கு 26 ஆயிரத்து 647 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20,400 கோடி ரூபாயும், வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8737 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு 18 ஆயிரத்து 219 கோடி ரூபாயும், போக்குவரத்துத் துறைக்கு 5375 கோடி ரூபாயும் எரியாற்றல் துறைக்கு 19 ஆயிரத்து 297 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறைக்கு 2354 கோடி ரூபாயும், சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 911 கோடி ரூபாயும்,தொழில்துறைக்கு 3268 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு 199 கோடி ரூபாயும், சுற்றுலாத் துறைக்கு 246 கோடி ரூபாயும், இந்து அறநிலையத் துறைக்கு 341 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தச் செலவினங்கள் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 188 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால் வருவாய்ப் பற்றாக்குறை 52 ஆயிரத்து 781 கோடி ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments