ஹோலி திருநாளையொட்டிக் கோவிலில் வழிபட்டும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பொதுமக்கள் கொண்டாட்டம்.!
நாடு முழுவதும் இன்று ஹோலி திருநாளையொட்டிக் கோவிலில் வழிபட்டும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹோலித் திருநாளையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஹோலித் திருநாளையொட்டி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
உத்தரப் பிரதேசம் மதுராவில் பிருந்தாவனத்தில் உள்ள பங்கி பிகாரி கோவிலில் ஹோலியையொட்டி ஏராளமானோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைப் பூசி வாழ்த்துத் தெரிவித்தனர்.
குஜராத்தின் வதோதராவில் உள்ள பள்ளியில் மாணவர்கள் ஆடிப் பாடியதுடன் பூக்களை அள்ளி வீசிக் கொண்டாடினர்.
கொல்கத்தாவில் ஹோலிக் கொண்டாட்டமாக மக்கள் ஒருவர் மீது ஒரு வண்ணப்பொடிகளைப் பூசி மகிழ்ந்தனர். பண்பாட்டுச் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் இசையுடன் கூடிய பாடல்களுக்குப் பெண்களும் சிறுமியரும் நடனமாடி மகிழ்ந்தனர்.
ராஜஸ்தானின் ஜெய்சல்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆடிப் பாடி ஹோலி கொண்டாடினர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹோலி கொண்டாடினார். இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் சிம்லாவில் உள்ள அவரது இல்லத்தில் ஹோலி கொண்டாடினார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைப் பூசிக் கொண்டாடினர்.
அசாமின் குவகாத்தியில் பாட்டுக்கும் தாளத்துக்கும் ஏற்றபடி மக்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
மகாராஷ்டிரத்தின் புனேயில் சிறார்கள் தண்ணீர் தெளிக்கும் துப்பாக்கிகளைக் கொண்டு விளையாடினர்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் நடனமாடினர். ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் நடனமாடி மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ராஜஸ்தான் சமூகத்தினர் ஒன்று சேர்ந்து ஹோலியைக் கொண்டாடினர்.
குஜராத்தின் அகமதாபாத்தில் மக்கள் வண்ணப் பொடிகளைத் தூவியும், இசைக்கேற்றபடி நடனமாடியும் மகிழ்ந்தனர்.
Comments