தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் தாக்கல்.!

0 2699

2022 - 2023 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தமிழகச் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து, பிணியின்மை எனத் தொடங்கும் திருக்குறளைக் கூறி உரையைத் தொடக்கினார்.

 தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும் என்றும், இப்பணிகள் 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தொல்லியல் அகழாய்வுப் பணிகள், கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப் பணிகள் 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

 நவீன முறையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள அளவையர்களுக்கு ரோவர் கருவிகள் வழங்குவதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிலக் குத்தகையில் இப்போதுள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், நியாயமான வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக் குத்தகைக் கொள்கை வகுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 அரசு நிலங்களைப் பாதுகாக்க, பராமரிக்க, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணிகளை மேற்கொள்ளச் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வானிலை முன்கணிப்புக்கான கருவிகள், அதிவேகக் கணினிகள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கும் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகநலத் திட்டங்களுக்காக 4816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களின் விளைவாக அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத் தடுத்திட சமூக ஊடகச் சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றும், காவல்துறைக்குப் பத்தாயிரத்து 285 கோடியே 22 இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 496 கோடியே 52 இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 வணிக வழக்குகளை விசாரிக்க ஏழு வணிக நீதிமன்றங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், நீதி நிர்வாகத் துறைக்கு 1461 கோடியே 97 இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடிக்கு 2531 கோடி ரூபாய், நகைக்கடன் தள்ளுபடிக்கு ஆயிரம் கோடி ரூபாய், சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடிக்கு 600 கோடி ரூபாய் என மொத்தம் 4131 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கால்வாய்கள், ஏரிகள் சீரமைத்தல், தடுப்பணை, கதவணை கட்டும் பணிகளுக்காக 2787 கோடி ரூபாயும், காவிரி வடிநிலப் பகுதியில் பாசன அமைப்புகளில் நீட்டித்தல், சீரமைத்தல், நவீன மயமாக்கல் பணிகளுக்கு 3384 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 சாத்தனூர், சோலையாறு, மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளைச் சீரமைக்கவும் அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனை மேம்படுத்தவும் உலக வங்கி உதவியுடன் 1064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டத்துக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4964 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் சிறப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆதரவில்லாத, கைவிடப்பட்ட காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள், விலங்குகளைப் பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிக்க வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்கள் என்னும் புதிய திட்டம் தொடங்கப்படும். இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 லண்டன் கியூ பூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை அரசு உருவாக்கும்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் வரையாடு பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதற்கு முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்துப் பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டம் சேத்துமடை, திண்டுக்கல் மாவட்டம் மன்னவனூர் மற்றும் தடியன்குடிசை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாகத் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments