சீர்திருத்து, செயலாற்று,உருமாற்று - பிரதமர் மோடி அறிவிப்பு..!
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இலக்கு நாட்டை தன்னிறைவு பெற வைப்பதும், புதுமை அடைய செய்வதும் தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்ரகாண்ட் மாநிலம் மிசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் காணொலி மூலம் பேசிய அவர், அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாமையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது என்றார்.
நாட்டின் கடைகோடி மனிதருக்கும் நலன் அளிக்கும் வகையில் முடிவு எடுக்க வேண்டுமென மகாத்மா காந்தியின் அறிவுரைகள் அவர் நினைவு கூர்ந்தார். இதற்காகவே பிரதமரின் கதி சக்தி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரச்சனைகளை கண்டறிந்து விட்டால் தீர்வுகளை காண்பது எளிது என அவர் குறிப்பிட்டார்.
பயிற்சி நிறைவு செய்துள்ளவர்கள், அவரவர் துறைகளில் 5 முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். "கோப்புகளுக்கும், கள நிலவரத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென அவர் கூறினார். கோப்புகளில் உள்ள ஒவ்வொரு எண்ணும் ஒரு உயிருடன் தொடர்புடையது என அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு உயிருக்காகவும் அதிகாரிகள் பணியாற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
தங்களுடைய சுய முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி நாட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லவும் அதிகாரிகள் பணியாற்ற வேண்டுமென அவர் கூறினார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணி ஏற்ற பின்னர் சீர்திருத்து, செயலாற்று, உருமாற்று என்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார்.
Comments