தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் வறண்ட வானிலையும், நாளை மறு நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை, வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 20-ந் தேதிவாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-ந் தேதி வாக்கில் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் புயலாகவும் உருமாறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments