சக துணை நடிகரை மோசடியில் சிக்க வைத்த துணை நடிகை ? போலி நகை மோசடி..!
சென்னையில் சக துணை நடிகரிடம் போலி தங்க நகைகளைக் கொடுத்து ஒன்றரை லட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவானதாகக் கூறப்படும் துணை நடிகை மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் சாலிகிராமத்திலுள்ள உத்தம்சந்த் என்பவருக்குச் சொந்தமான நகை அடகுக் கடைக்குச் சென்ற துணை நடிகர் ரமேஷ் என்பவர், 43 கிராம் நகைகளை அடகுவைத்து ஒன்றரை லட்ச ரூபாய் பெற்றுள்ளார்.
உத்தம்சந்த் அந்த நகைகளை வங்கிக்குக் கொண்டு சென்றபோது, அவை போலி எனத் தெரியவந்துள்ளது. அதுகுறித்து ரமேஷிடம் கேட்டபோது, அந்த நகைகள் தன்னுடையது அல்ல என்றும் சலோமியா என்ற துணை நடிகையுடையது என்றும் தெரிவித்துள்ளார்.
அவசரத் தேவைக்காக அந்த நகைகளை அடகு வைத்துத் தருமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். தொடர்ந்து போலி நககளைக் கொடுத்து தன்னை மோசடியில் சிக்க வைத்து விட்டதாக சலோமியா மீது ரமேஷ் போலீசில் புகாரளித்துள்ளார்.
Comments