12 முதல் 14 வயதினருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி நாடு முழுவதும் தொடக்கம்
இந்தியாவில் 12 வயது முதல் 14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி இயக்கமும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இயக்கமும் தொடங்கியுள்ளது. இந்த வயதுப் பிரிவினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடும் அரசின் முயற்சிகளில் இன்றைய நாள் ஒரு முதன்மையான நாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றிலிருந்து 12 முதல் 14 வயது வரையான சிறார்கள் கொரோனா தடுப்பூசிக்குத் தகுதி பெறுவதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்குத் தகுதி பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வயதுப் பிரிவினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உலகின் பல நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளதாகவும், இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள் கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பல தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதையும், பிற நாடுகளின் தடுப்பு மருந்துகளுக்கு உரிய மதிப்பீட்டுக்குப் பின் ஒப்புதல் வழங்கியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா வலுவாக உள்ள அதே நேரத்தில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments