எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 59 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 11 கிலோ தங்க நகைகள், சுமார் 118 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாம் அமைச்சராக இருந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் முறைகேடாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கனவே ஒரு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி மீது மேலும் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, அவருக்குத் தொடர்புடையதாகக் கூறப்படும் 59 இடங்களில் காலை முதலே சோதனை நடத்தியது.
கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 59 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், கோவையில் 41 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.
59 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 11 கிலோ தங்க நகைகள், சுமார் 118 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கணக்கில் வராத பணம் 84 லட்சம் ரூபாய், சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 34 லட்சம் ரூபாய் அளவுக்கு பல தரப்பட்ட கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் எந்த ஆவணங்களோ ,பணமோ அல்லது நகைகளோ ஏதும் கைபற்றபடவில்லை என்றும் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தியிருக்கிறார்கள் என்றும் அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை தெரிவித்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு ஆகியவற்றில் இரண்டாவது முறையாக சோதனை நடைபெற்றுள்ளதாக எஸ்.பி வேலுமணி கூறினார். ஏற்கனவே நடைபெற்ற சோதனையிலும் சரி, தற்போது நடைபெற்ற சோதனையிலும் சரி ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Comments