போலீசுக்கு பயந்து குளத்திற்குள் குடித்தனம்.. ரௌடியைக் காட்டிக் கொடுத்த "டிரோன்"
தென்காசியில் கையில் அரிவாளுடன் கெத்து காட்டிய ரவுடி, போலீசாரின் தேடுதலுக்கு பயந்து நான்கு நாட்களாக குளத்திற்குள் குடித்தனம் நடத்திய நிலையில், டிரோனை பறக்கவிட்டு, ரவுடி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் கைது செய்தனர்.
செடி, கொடிகள் நிரம்பிய குளத்திற்குள் இருந்து தண்ணீர் பாம்பு தலையை தூக்குவது போல், மெல்ல, மெல்ல வெளியே வரும் இவர் தான் போலீசாருக்கு பயந்து நான்கு நாட்களாக குளத்திற்குள் குடித்தனம் நடத்திய ரவுடி சாகுல் ஹமீது.
தென்காசியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற அந்த ரவுடி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், சில நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்திருக்கிறான்.
புகாரின் பேரில் தென்காசி போலீசார் அவனை கைது செய்ய முயன்ற நிலையில், அங்குள்ள பொத்தைகுளத்திற்குள் சென்று ஒளிந்து கொண்டான்.
போலீசுக்கு பயந்து, குளத்திற்குள் குடித்தனம் நடத்திய போதிலும் அவனது கொட்டம் அடங்காமல் இருந்துள்ளது. பொத்தைக்குளம் பகுதியில் ஆடு மேய்க்க செல்வோரை அடித்து விரட்டுவது, அங்கு குளிக்கச் செல்லும் பெண்களை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபடுவதுமாக இருந்து வந்தான். ஒளிந்திருக்கும் தகவலை போலீசாரிடம் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியிருக்கிறான்.
இதனையடுத்து, ரவுடியை பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்திய போலீசார், முதற்கட்டமாக குளத்திற்குள் இறங்கி அவனை பிடிக்க முயன்றனர்.
ஆனால், 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த குளத்திற்குள் பாதிக்கும் மேல் தண்ணீர் நிரம்பியிருப்பதால், அங்கும், இங்கும் ஒளிந்து கொண்டு போலீசாருக்கு கண்ணாமூச்சி காட்டியுள்ளான். இவ்வாறு 4 நாட்களாக போக்கு காட்டி வந்த குளத்து ஆமையை பிடிக்க திட்டம் போட்ட போலீசார், ரவுடி பதுங்கியிருந்த குளத்தில் டிரோன் கேமராவை பறக்கவிட்டனர்.
டிரோன் கேமராவில் சிக்கியது தெரிந்ததும், இனிமேல் தப்பிக்க முடியாது என நினைத்த ரவுடி குளத்திற்குள் இருந்து வெளியே வந்து கையை உயர்த்தி ஆஜராகினான். கையில் இருந்த அரிவாளை தூக்கிப்போட்டுவிட்டு, போலீசாரிடம் பெட்டிப்பாம்பாக சரணடைந்தான்.
இதனையடுத்து, அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments