"ஹிஜாப்-க்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்" - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0 5252

கர்நாடாவில் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என தீர்ப்பளித்துள்ள அம்மாநில உயர்நீதிமன்றம், ஹிஜாப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. 

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, இஸ்லாமிய மாணவிகள் 18 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தொடர்ந்து 11 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

விசாரணையின் போது மூன்று பிரதான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், அதற்கு பதிலளித்து தீர்ப்பு வாசித்தனர். முதலில், ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு சட்டத்தின் 25ஆவது பிரிவின் படி அடிப்படை மத உரிமையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத நம்பிக்கையில் தவறாமல் பின்பற்றவேண்டிய கட்டாய நடைமுறை இல்லை என தீர்ப்பளித்தனர்.

பள்ளி சீருடை சட்டம் அடிப்படை உரிமைகளை பறிக்கிறதா? என்ற கேள்விக்கு, சீருடை சட்டம் அவசியமான கட்டுப்பாடு தான் எனவும், பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது என்றதோடு, அரசின் சீருடை சட்டத்துக்கு அனைவரும் உள்பட்டவர்கள் என தெளிவுபடுத்தினர்.

ஹிஜாப் அணிய கர்நாடகா அரசு விதித்த தடை, அனைத்து தரப்பினருக்கும் சமமான உரிமையை வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 14ஆவது பிரிவையும், மதம், இனம், சாதி, பாலினம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து வேறுபாடு காட்டக்கூடாது என்ற 15ஆவது பிரிவையும் மீறுகிறதா என்ற கேள்விக்கு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர கர்நாடகா அரசு விதித்த தடை செல்லும் எனவும், அது நியாயமானது கூட எனக் கூறிய நீதிபதிகள், கல்வி நிலையங்களில் மத அடையாளம் கொண்ட ஆடைகளை தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது எனவும் தீர்ப்பளித்தனர்.

மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஹிஜாப் வழக்கில், தீர்ப்பு வெளியாவதை ஒட்டி, முன்னெச்சரிக்கையாக பெங்களூருவில் வரும் 21-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments