முன்னாள் காதலிக்குத் தொல்லை.. தட்டிக்கேட்ட பெண்ணின் சித்தப்பாவை காரை ஏற்றிக் கொன்ற கொடூரம்..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வேறொருவரை திருமணம் செய்து கொண்ட காதலிக்கு செல்போனில் தொல்லை கொடுத்து வந்தவன், அந்த பெண்ணின் சித்தப்பாவை காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த பெத்துகுமார் என்பவனும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்துள்ளனர்.
ஆனால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் சம்மதம் கிடைக்காத நிலையில், அனிதா வீரசோழன் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அனிதாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால், பெத்துகுமார் செல்போன் மூலம் அடிக்கடி அனிதாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் காதலனின் தொந்தரவை வெளியில் சொன்னால் குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று நினைத்து அனிதா கணவரிடம் மறைத்துவிட்ட நிலையில், இடையில், வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வந்திருந்த பாண்டியன், மனைவியின் செல்போனை எடுத்து பார்த்த போது, பெத்துகுமார் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
இந்த விஷயத்தை அனிதாவின் சித்தப்பா செந்திலிடம் கூறிய பாண்டியன், பெத்துக்குமாரிடம் எடுத்துச் சொல்லி கண்டிக்குமாறு கூறியிருக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது மகன் சூர்யாவை அழைத்துக் கொண்டு பெத்துகுமாரின் வீட்டுக்கு வந்திருக்கிறார் செந்தில்.
அப்போது, பெத்துகுமார், அவனது தாய் விஜயலட்சுமி, தம்பி விஜயகுமார் என மூன்று பேரும் சேர்ந்து கொண்டு, செந்திலிடம் வாக்குவாதம் செய்து, தகராறு செய்திருக்கின்றனர். ஒருவழியாக சண்டை முடிந்து, செந்திலும், அவரது மகன் சூர்யாவும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றிருக்கின்றனர்.
பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டுக்கே வந்து சத்தம் போட்டதால், ஆத்திரம் தாங்காமல் இருந்த பெத்துகுமார் காரை எடுத்துக் கொண்டு செந்திலிடம் வம்பிழுப்பதற்காக சென்றிருக்கிறான்.
பெத்துகுமாருடன் அவனது தாய், தம்பி, தம்பியின் கூட்டாளிகள் மூன்று பேரும் உடன் சென்றனர். காரில் சென்ற அவர்கள் பந்தல்குடி புறவழிச்சாலையில் மகனுடன் பைக்கில் சென்ற செந்தில் மீது காரை விட்டு மோதியதாக கூறப்படுகிறது. இதில், நிலைத்தடுமாறி விழுந்த செந்தில் பலத்த அடிபட்டு மகன் கண்ணெதிரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மகன் சூர்யா காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சூர்யா அளித்த தகவலின் பேரில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை ஏற்றி கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி.மனோகர் ஆய்வு செய்தார்.
Comments