கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் கந்து வட்டிக் கும்பலால் கொல்லப்பட்ட வழக்கு ; குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் கந்து வட்டிக் கும்பலால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சிவக்குமார் என்பவனிடம் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி இருந்தார். தவணைப் பணத்தை கொடுக்கச் சென்ற அந்தப் பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த சிவக்குமார், அதனை வீடியோவாக எடுத்து இணையத்திலும் வெளியிட்டான்.
அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலுச்சாமியின் உதவியுடன் இதுகுறித்து பெண்ணின் தாய் போலீசில் புகாரளித்தார். இதனால் ஆத்திரம் கொண்ட கந்து வட்டிக் கும்பல் வேலுச்சாமியை வெட்டிக் கொலை செய்தனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு அரங்கேறிய இந்தக் கொலை தொடர்பாக சிவக்குமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்களில் ஆமையன் என்பவனை சக கூட்டாளிகளே வெட்டிக் கொன்றனர். பூபதி என்பவன் தலைமறைவானான்.
பாலியல் வன்கொடுமை வழக்கும் வேலுச்சாமி கொலை வழக்கும் தனித்தனியாக நடைபெற்று வந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேலுச்சாமி கொலை வழக்கில் சிவக்குமார் உட்பட 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Comments