22 ஆண்டுகள் காரிலேயே உலகை சுற்றி தாயகம் திரும்பிய தம்பதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
அர்ஜென்டினாவில் கடந்த 2000 -வது ஆண்டில் உலகை சுற்றி வருவதற்காக தொடங்கிய பயணத்தை 22 ஆண்டுகளுக்கு பிறகு முடித்துக்கொண்டு தாய்நாடு திரும்பிய ஒரு குடும்பத்துக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஹெர்மன் மற்றும் கேன்டெலாரியா தம்பதி 2000 -வது ஆண்டு ஜனவரி 25-ல் அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ்-ல் இருந்து உலகைச் சுற்றிவரும் பயணத்தை தொடங்கினர்.
102 நாடுகளில் பயணம் செய்த அவர்கள் சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பயணத்தின் ஆரம்பத்தில் அலாஸ்காவுக்கு சென்ற அந்த தம்பதி,அங்கு 1928-ஆம் ஆண்டு மாடல் கிரஹாம் பெய்ஜ் (Graham-Paige) எனும் காரை வாங்கி அங்கிருந்து காரிலேயே பயணம் செய்த நிலையில், உலக பயணத்தின் போதே 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
பயணம் சென்ற நாடுகளில் பெரும்பாலும் வீடுகளில் விருந்தாளிகளாக தங்கியுள்ளனர். இணையவழி மூலம் அவர்களது பிள்ளைகள் கல்வி கற்றதாகவும், பயண அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும் அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.
Comments