திருந்த மாட்டோம்.. வருந்த மாட்டோம்.. பூரணி மம்மி ரிட்டர்ன்..! ரூ 700 க்கு எனர்ஜி தரிசனமாம்..!
சென்னையில் அடுத்தவர் கணவரை அபகரித்த பஞ்சாயத்தில் சிக்கி சர்ச்சைக்குள்ளான அன்னபூரணி எனர்ஜி தரிசனம் தருவதாக கூறி மீண்டும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குதிரை சவாரி செய்வது போல ஆடிக்கொண்டே தன்னை கடவுளின் அவதாரம் என்றும் திவ்ய தரிசனம் தருவதாக கூறி ஆசி வழங்கியதால் சர்ச்சையில் சிக்கியவர் அன்னபூரணி..!
இந்த செயல், இந்து கடவுளர்களை இழிவுபடுத்தும் செயல் என்று அவருக்கு கண்டனம் தெரிவித்த பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் அன்னபூரணி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான அன்னபூரணி தான் கடவுளின் அவதாரம் என்று கூறவில்லை என்றும், யாரிடமும் கட்டணம் வசூலித்து ஏமாற்றவில்லை என்றும் விளக்கம் அளித்துச்சென்றார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அன்னபூரணி மீண்டும் தரிசன வசூலில் இறங்கி உள்ளார். கடந்த முறை திவ்ய தரிசனம் தர முயன்று போலீஸ் புகாருக்குள்ளான அன்னபூரணி அன் கோ இந்த முறை எனர்ஜி தரிசனம் தருவதாக விளம்பரப்படுத்தி வருகிறது.
இந்த முறை சென்னை நைனார் குப்பத்தில் உள்ள சுதானந்தா ஆசிரமத்தில் அன்னபூரணி எனர்ஜி தரிசனம் தர இருப்பதாக கூறி ஒரு ஆளுக்கு 700 ரூபாய் வசூலிக்கப் படுவதாகவும், எக்காரணத்தை கொண்டும் நுழைவு கட்டணம் திருப்பி கொடுக்கபடமாட்டாது என்ற நிபந்தனையுடன் இணையவழியாக இந்த வசூல் வேட்டையில் இறங்கி உள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
ஏப்ரல் 3 ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பூரணி மம்மியின் தரிசனம், மெடிடேசன், ஆன்மீக மந்திரங்களை கற்று தருவதாக கூறி விளம்பரப்படுத்தி வசூலை சத்தமின்றி செய்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அன்னபூரணிக்கு எதிராக மீண்டும் போலீசில் புகார் அளிக்க பாரத் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
Comments