நம்பிக்கையின் அடையாளம் தேர்தல் முடிவு.! மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
பா.ஜ.க. மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாகவும், கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசின் திட்டங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது தான் இலக்கு எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் தனியாக 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 273 தொகுதிகள் கிடைத்துள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகளில், பா.ஜ.க. தனிப்பெருங்கட்சியாக பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்திலும் தனித்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கோவாவில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. 20 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை ஆதரவுடன் அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை மீண்டும் கைப்பற்றுகிறது. பா.ஜ.க.வின் இந்த வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வாக்காளர் பெருமக்களுக்கும், கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். பா.ஜ.க. மீதான அன்பை மக்கள் மேலும் வலுப்படுத்தியுள்ளனர் எனவும், கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபணமாகியுள்ளது எனவும் கூறினார்.
உத்தரகாண்டில் முதன்முறையாக தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி புதிய வரலாற்றை எழுதியுள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பா.ஜ.க. ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்று தான் தேர்தல் வெற்றி என்ற பிரதமர், கடை கோடியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசின் திட்டம் கொண்டு செல்லப்பட்டுள்ளது, அதுதான் பா.ஜ.க.வின் இலக்கு எனவும் கூறினார்.
Comments