5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி!

0 5274

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் அக்கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். அறுதிப் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 273 தொகுதிகள் கிடைத்துள்ளன.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. காங்கிரசுக்கு 2 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

யோகி ஆதித்யநாத் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க நிகழ்த்தி உள்ள தொடர் வெற்றியை அடுத்து அந்த கட்சியின் தொண்டர்கள் பல்வேறு ஊர்களில் வெற்றிக் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் ஹோலி பண்டிகை முன்னதாகவே தொடங்கி விட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, பாஜகவின் வெற்றியை உறுதி செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர், பாஜக அரசு மீதான மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி காண்பிப்பதாக குறிப்பிட்டார். 

கோவா தேர்தல் முடிவு தொடர்பாக வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யானதாக குறிப்பிட்ட பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக ஒரு முதலமைச்சர் தொடர்ந்து 2வது முறை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், 2022 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments