பஞ்சாப் தேர்தல் ஆம் ஆத்மி அமோகம்..! ஆட்சியை பிடித்தது
பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெருங்கட்சியாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்திற்கு கடந்த மாதம் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மனி அகாலிதளம் என நான்கு முனை போட்டி நிலவியது.
அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அமிரிந்தர் சிங், காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை பின்னுக்கு தள்ளி, ஆம் ஆத்மி கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தலைநகர் டெல்லியை தொடர்ந்து, பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.
ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன், துரி தொகுதியில் வெற்றி பெற்றார். சங்ரூர் பகுதியில் நடைபெற்ற ஆம் ஆத்மியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பகவந்த் மன்-னின் தாய் ஹர்பால் கவுர், தனது மகனை ஆரத்தழுவி கண்கலங்கியதோடு, முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். சாம்கவுர் சாஹிப் தொகுதியில் இதற்கு முன்னர் மூன்று முறை வெற்றி பெற்றிருந்த சரண்ஜித் சிங், இந்த முறை தோல்வியை தழுவியுள்ளார்.
அதேபோல, பாதார் தொகுதியிலும் தோல்வியுற்றார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் தோல்வியை தழுவினார். பஞ்சாப்பின் முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்கும், பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித்பால் சிங்கிடம் வெற்றியை பறிகொடுத்தார்.
இதனிடையே, பஞ்சாப்பில் ஆம் ஆத்மிஆட்சியை பிடித்தை அடுத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா, சத்தியேந்தர் ஜெயின் உள்ளிட்டோர் டெல்லியிலுள்ள அனுமர்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பேசிய மணீஷ் சிசோடியா, கெஜ்ரிவாலின் ஆட்சி முறையை பஞ்சாப் ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.
Comments