சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்பு..!

0 1436

போர் தொடங்கி 13 நாட்களுக்கு பின் உக்ரைனின் சுமி நகரில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ரஷ்ய ராணுவம் அனுமதி அளித்துள்ள நிலையில், அங்கு சிக்கி இருந்த இந்திய மாணவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 13ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தம் மேற்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக 3 சுற்றுகளாக இருநாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவின் அடிப்படையில் தற்காலிகமாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் பொதுமக்களை வெளியேற்ற மனிதாபிமான வழித்தடம் அமைக்கப்படும் என ரஷ்ய அரசு அறிவித்தது.

இதன் காரணமாக, மரியுபோல், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் ஆகிர நகரங்களில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சுமி உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்களை மீட்பதில் சிக்கல் இருந்ததாக கூறப்பட்டது. இதனால், சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உதவுமாறு அந்நாட்டு அரசுக்கும், ரஷ்யாவுக்கும் அடுத்தடுத்து வேண்டுகோள் விடுத்தும் அது ஏற்கப்படவில்லை என ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்திய பிரதிநிதி திருமூர்த்தி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணி முதல் சுமி நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் துணை பிரதமர் ஐரினா தெரிவித்தார். அங்கு சிக்கிய மக்கள் போல்டவா என்ற நகருக்கு அழைத்து செல்லப்படுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மீட்பு பேருந்துகளில் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக சுமி ஆளுநர் டிமிட்ரோ சிவிட்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்தியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்களும் பேருந்தில் எற்றப்பட்டு மத்திய உக்ரைனின் போல்டாவாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments