குடியரசு தின விழாவில் விருது பெற இயலாதவர்களுக்கு நேரில் விருது வழங்கினார் முதலமைச்சர்
கொரோனா காரணமாக, குடியரசு தினத்தன்று விருது பெற இயலாதவர்களை நேரில் வரவழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
சிவகங்கையை சேர்ந்த முத்துகிருஷ்ணன், திருச்சியை சேர்ந்த லோகேஷ், கோவையைச் சேர்ந்த மருத்துவர் அசோகன், திருப்பூரைச் சேர்ந்த பேச்சியம்மாள் ஆகிய நான்கு பேருக்கும் ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன் வீர, தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் வழங்கினார்.
மேலும்,திருந்திய நெல் சாகுபடிக்கான விருது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செ.ராமசாமிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும், 2020-21ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதை மூன்று பேருக்கு முதலமைச்சர் வழங்கினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் ஆற்றிய சேவையை பாராட்டி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது கிரிஜா குமார்பாபுவுக்கு வழங்கப்பட்டது.
Comments