உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தம் அறிவிப்பு
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
உக்ரைனின் சிக்கியிருக்கும் இந்தியர்கள் ஆப்பரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வரும் நிலையில், சுமி நகரில் இருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் திருமூர்த்தி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறும் வகையில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய நேரப்படி காலை 8 மணியில் இருந்து போர் நிறுத்தம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், செர்னிகோவ் பகுதிகளில் இருக்கும் இந்தியர்கள், பெலாரசின் கோமல் நகர் வழியாக விமானம் மூலம் ரஷ்யா அழைத்து வரப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
சுமியில் சிக்கியுள்ள இந்தியர்கள் இரண்டு வழிகள் வழியாக போல்டாவா நகருக்கும் அங்கிருந்து ரஷ்யாவின் Belgorod நகருக்கும் விமானம் அல்லது ரயில் அல்லது சாலை வழியாக அழைத்துவரப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கார்கோவ் பகுதியில் இருக்கும் இந்தியர்கள் உக்ரைனின் Lvov, Uzhgorod, Ivano-Frankivsk நகரங்கள் வழியாக ரஷ்யாவின் Belgorod-க்கு விமானம் மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ, சாலை மார்க்கமாகவோ பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுவர் என ரஷ்யா கூறியுள்ளது.
மரியூபோலில் இருந்து ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஆன் டான் நகருக்கு Novoazovsk மற்றும் Taganrog வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
Comments