பாசமாக பழகுவது போல் நடித்து தொழிலதிபரை ஏமாற்றி கடத்திய பெண்ணுக்கு வலைவீச்சு
திருச்சியில் பாசமாக பழகுவது போல் நடித்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ஏமாற்றிய பெண் ஒருவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் கேட்டு அவரை கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவளர்ச்சோலையைச் சேர்ந்த ஜோசப் வல்லவராஜ் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், நண்பருடைய தோப்பையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த அவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த ஏற்கனவே திருமணமான சுந்தரி என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஜோசப் வல்லவராஜும், சுந்தரியும் நெருங்கி பழக ஆரம்பித்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் கொழித்து வந்த ஜோசப்பிடம் நிறைய பணம் இருப்பதை அறிந்த சுந்தரி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் போட்டிருக்கிறார்.
இருவரும் வெளியில் செல்வோம் எனக் கூறி திருவளர்சோலைக்கு ஜோசப்பை காரில் அழைத்து வந்த சுந்தரி, தனது கூட்டாளிகளையும் அங்கு வரவழைத்திருக்கிறார். பின்னர், ஜோசப்பை மிரட்டி கூகுள் பே மூலம் ஒரு லட்சம் ரூபாய் பறித்துக் கொண்டதோடு, மேலும் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்திச் சென்றிருக்கின்றனர்.
ஆனால், மாந்துறை அருகே வாகன சோதனையின் போது அவர்களது கார் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஜோசப் அபயக்குரல் எழுப்பியுள்ளார். இதையடுத்து, கடத்தல் கும்பலை கைது செய்த போலீசார், இடையிலேயே காரில் இருந்து இறங்கி தப்பியோடிய கடத்தலுக்கு மூளையான சுந்தரியை தேடி வருகின்றனர்.
Comments